What are you looking for?

தற்போதைய நிலவரம்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது தற்போதைய நிலை, கடந்த கால வளர்ச்சி, வீழ்ச்சி வீதங்கள்.

கல்வி

விவசாயம்

சுகாதாரம்

மீன்வளம்

கால்நடைகள்

நிர்வாகம்

சனத்தொகை

பொருளாதாரம்

சமூக சேவை

தொழில்வாய்ப்பு

சங்கங்கள்

வானிலை

அரசு நிறுவனங்கள்

சமூக பிரச்சினைகள்

வாழ்க்கைத்தரம்

உள் கட்டைமப்பு

“என் கனவு யாழ்" - 10 அம்ச திட்டம்

“என் கனவு யாழ்" என்பது அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் 5 முன்னணி மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி கருதப்படுவதை உறுதிசெய்யும் ஒரு முயற்சியாகும். இந்த முயற்சியில் நம்பிக்கை கொண்ட மக்களை, யாழ்ப்பாணம், தெற்கு இலங்கை முதல் புலம்பெயர் வரை இணைத்து ஒரு வலுவான அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் தலைமையை உருவாக்குவதே இதன் குறிக்கோள்.

அரசியல் தீர்விற்கான ஆணித்தரமான அழுத்தம்

01

தமிழர்களை உள்ளடக்கிய ஆட்சியொன்றினூடாக அரசியல் யாப்பு சீர்திருத்ததின் மூலம் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்ட கால விருப்பத்தை நான் நன்கு அறிவேன். எனது விருப்பமும் இதுவே. எமது மக்களின் இந்த விருப்பத்தினை கடந்த காலங்களில் சுதந்திர கட்சியின் ஆட்சியாளர்கள் பலரிடமும் நான் எடுத்துக்கூறி இருக்கிறேன். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் நான் ஜனாதிபதியுடன் ஏற்கனவே பேசியுள்ளேன். அவரும் மிகுந்த கரிசனை கொண்டிருக்கிறார். அவர்களின் விடுதலை தொடர்பில் நான் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு என்னாலான காத்திரமான அழுத்தங்களை பிரயோகிப்பேன். யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவூகள் பலவருடங்களாக வீதியில் நின்று போராடுவதை பல தடவைகள் உன்னிப்பாக அவதானித்துள்ளேன்.அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமான நடவடிக்கைளை எடுப்பதற்கு நான் என்னால் முடிந்தளவுக்கு முயற்சிகளை மேற்கொள்வேன். விரைவில் அவர்களுக்கான தீர்வுகள் கிடைத்து இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் விரைவில் திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும் முப்படையினரினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் அரச, தனியார் காணிகளை ஒரு பொறிமுறைக்கு அமைவாக விடுவித்து அம்மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவேன். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான பாதுகாப்பு, வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து கடந்த காலங்களில் நான் முக்கிய கவனம் செலுத்தியிருக்கின்றேன். இலங்கையில் யு த்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் முடிந்த நிலையிலும் முன்னாள் போராளிகள் பலர் வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கும் நாளாந்த ஜீவனோபாயத்திற்கு சிரமப்படுவதையும் நான் நன்கறிவேன். அவர்களில் நிரந்தர வாழ்வாதாரமற்ற முன்னாள் போராளிகளை அடையாளப்படுத்தி அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக தகுதியான தொழில்வாய்ப்பு அல்லது சுய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வழிசமைப்பேன். யுத்தத்தில் அங்கவீனமான முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,மாற்றுதிறனாளிகளின் விபரங்களை ஒன்று திரட்டி விசேட பொறிமுறையை உருவாக்குவதனூடாக அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன்.

02

மீண்டும் கல்வியில் முதலிடம்

தமிழ் மக்களின் ஒரு பெரும் செல்வமாகவும், மூலதனமாகவும், அழியாச்சொத்தாகவும் இருப்பது கல்வி. எத்தனை இடர்கள் வந்தபோதிலும் கல்வியை எமது மக்கள் கைவிட்டதில்லை. ஆனால், வட மாகாணம் இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்று விட்டதை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நன்கு திட்டமிட்ட காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை எமது புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பில் பலருடனும் நான் கலந்துரையாடி எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆராய்ந்து வருகின்றேன். கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் முன்னைய காலத்துடன் ஒப்பிடும்பொழுது பெரும் வீழ்ச்சி கண்டுள்ளன. குடும்ப வறுமை, பெற்றோரின் கவனக்குறை, போதிய விழிப்புணர்வின்மை உட்பட பல்வேறு காரணங்கள் இதற்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நிவர்த்திப்பதற்கான பொருத்தமான திட்டங்களை நான் மேற்கொண்டு வருகின்றேன். குறிப்பாக வறுமை காரணமாக பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்கான திட்டம் ஒன்றையும் அவர்களுக்கான காலை உணவு வழங்குவதற்கு அரசாங்கத்தின் மூலம் நான் நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன். மாணவர்களின் பாடசாலை வரவு, இடைவிலகல் மற்றும் அடைவு மட்டமானது சீர்செய்யப்பட்டு, விஞ்ஞான, ஆங்கில கற்பித்தல் தரத்தை உயர்த்துவதற்கு ஆவன செய்வேன் என்று உறுதி கூறுவதுடன் நகர்ப்புற பாடசாலைகளுக்கும் கிராமப்புற பாடசாலைகளுக்கும் இடையில் காணப்படும் உட்கட்டமைப்பு, ஆளணி ரீதியான சமத்துவம் இன்மையை சரி செய்வதற்கும் பல்கலைகழகம் செல்ல முடியாத மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வதேச தரத்திலான திறன் விருத்தி சார் தொழிற்கல்வி நெறிகளை அறிமுகப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் ஊடாக நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.

துரித பொருளாதார வளர்ச்சி

03

மூன்று தசாப்த காலப் போருக்குப் பின்னர், சமூகப் பொருளாதார சவால்கள், அழிவடைந்த, அபிவிருத்தியடையாத உட்கட்டமைப்பு, சிதைவடைந்து போன சமூக நிறுவனங்கள் நாட்டின் எஞ்சிய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இங்கு பின்தங்கியுள்ளது. போருக்குப் பின்னரான மீள்கட்டுமான உபாயமானது கட்டடவாக்க உட்கட்டமைப்பு, சுயதொழில் வாய்ப்பினை ஊக்குவிப்பதற்கான கொடுகடன் விரிவாக்கம், தனியார் துறை முதலீட்டினை ஊக்குவித்தல் என்பனவற்றை மையப்படுத்தியிருந்த போதும், வலுவான நீடித்த பொருளாதார வளர்ச்சி, தொழில்நிலை, அதிகரித்த வீட்டலகுகளின் வருமானங்கள் என்பனவற்றை வழங்குவதில் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. வடக்கில் ஒரு பொருளாதார மறுமலர்ச்சியினை ஏற்படுத்துவதற்கான ஏராளமான பௌதிக வளங்களும் மனித வளங்களும் இருக்கின்றன. உரிய முன்மொழிவுகளை முன்வைத்து அரசாங்கத்திடம் அவற்றுக்கான நிதியை பெற்று பாரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான கைத்தொழில் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்த தமிழ் அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள். அரசாங்கம் தானே எல்லாவற்றையும் முன்வந்து செய்யும் என்று இருந்துவிட முடியாது. நாம் தான் திட்டங்களை வகுத்து, அமைச்சரவையில் சமர்ப்பித்து நிதியை பெற்றுக்கொள்ளும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும். என்னால் இதனை திறம்பட செய்ய முடியும். யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்நாட்டு தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை ஊக்கிவிப்பதற்கு ”Make In Jaffna” என்ற தொனிப்பொருளில் செயற்றிட்டம் ஒன்றைசெயற்படுத்தவுள்ளேன். வடக்கில் பாரிய முதலீடுகளை கொண்டுவரும் நோக்கில் 'தாயகத்தை வளமாக்குவோம்' என்ற தொனிப்பொருளில் தென் இலங்கையிலும், இந்தியாவிலும், புலம் பெயர் நாடுகள் மத்தியிலும் மாநாடுகள் மற்றும் சந்திப்புக்களை நடத்தவிருக்கிறேன். கடந்த காலங்களில் வடக்கில் பலர் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை நான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். மேலும், பின்வரும் செயற்திட்டங்களின் விழிப்புணர் மற்றும் நடைமுறைப்படுத்தல் மூலமாக யாழ், கிளிநொச்சி மாவட்ட பொருளாதாரத்தில் காத்திரமான பங்களிப்பை செலுத்துவேன்.

04

விவசாயம், மீன்பிடி, கால்நடை துறைகளில் துரித மீளெழுச்சி

விவசாயமே எமது மக்களின் பொருளாதார பலத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றது. ஏறத்தாழ 40% மக்கள் விவசாயத்தை ஜீவனோபாயமாக கொண்டவர்கள். அதனால் விவசாய மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், உணவு பாதுகாப்பினை எய்துதல், உற்பத்தி மேம்பாட்டினூடாக இலாபகரமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான உணவு உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியமாகின்றது. தொழில்நுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்தி விவசாய துறையில் ஒரு மறு மலர்ச்சியினை ஏற்படுத்துவதன் மூலமே இதனை சாதிக்க முடியூம். இதனை நடைமுறை சாத்தியமாக்குவதற்கு விவசாய தொழில்மயமாக்கல் (Agri Industrialization) திட்டத்தின் கீழ் எம் விவசாயிகளை ஒருங்கிணைத்து உணவு உற்பத்திக்கான நவீன முறைமைகளை பயன்படுத்தி விவசாய தொழில்நுட்ப அபிவிருத்தி, கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்து, நவீன விவசாய இயந்திரங்களை பயன்படுத்தி உணவவு உற்பத்தி, பெறுமதி சேர்த்தல், களஞ்சியப்படுத்துதல், சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் புதிய முறைமைகளும் அறிமுகப்படுத்தப்படும். ஸ்மார்ட, டிஜிட்டல் விவசாயம் என்பது தரம், அளவு ஆகியவற்றை அதிகரிக்கும் பொருட்டு நவீன துல்லிய தொழில்நுட்பங்களான இன்டர்நெட், GPS, மண் சோதனை, தகவல் முகாமைத்துவம் ஆகியவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண்ணை முகாமைத்துவமாகும். விவசாய துறை எந்தளவுக்கு எமது மக்களின் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் மிக்கதாக இருக்கின்றதோ அந்தளவுக்கு மீன்பிடித்துறையும் முக்கியமானது. மீன்பிடித்துறையில் பாரியளவில் அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டி இருக்கின்றது. இதுதொடர்பில், அரசாங்கம், வங்கிகள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து “நீலப்புரட்சி” திட்டம் ஒன்றை முன்மொழிந்து அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கால்நடை, பண்ணை வளர்ப்பு தொழில்துறை கணிசமான அளவுக்கு மக்களின் வாழ்வாதார தொழிலாக காணப்படுகின்றது. கால்நடை உற்பத்தி பொருட்களுக்கான கேள்வியும் உள்ளூர் சந்தைகளிலும் வெளிநாட்டு சந்தைகளிலும் தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் நிதி, சமூக, தொழில்நுட்ப, சுற்றாடல் சார்ந்த காரணிகளை கவனத்தில் கொண்ட உபாயங்களின் ஊடாக எமது மக்களின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான முக்கியமான ஒரு திறவுகோலாக நாம் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டு, இலக்கிய புத்தாக்கம்

05

ஒரு சமூகத்தின் மொழி, கலை, கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு என்பவை மண்வாசனையோடு தொடர்புபட்டு அச்சமூகத்தின் அடையாளத்தைப் பிதிபலிப்பவை. எமது கிராமங்களில் பிரபல்யமாயிருந்து தற்போது மறைந்து போய்க் கொண்டிருக்கும் கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகள் மீள் எழுச்சியுற வழி வகுக்கப்பட்டு, நலிவடைந்த கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட பாடுபடுவேன். மொழியை உயிராய் மதிப்பவர்களே தமிழர்கள், அரச அலுவலகங்கள், நிர்வாகக் காரியாலயங்களில் தமிழ் மொழியின் இருப்பை 100% உறுதிப்படுத்துவேன். குறிப்பாக யாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதலிடம் ஒதுக்கப்படும். ஆரம்பக் கல்வியிலிருந்தே மாணவர்களுக்கு மொழி வளர்ச்சியை ஏற்படுத்த அனைத்துப் பாடசாலைகளிலும்; தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்வேன். முன்னாள், இந்நாள் தமிழ், இலக்கியவாதிகளின் ஆவணங்கள் கோவையாக்கப்படும். தமிழ் கலாச்சார தொல்பொருள் வரலாற்று ஆவணங்கள், சின்னங்கள் பாதுகாக்கப்படுவதுடன் தொன்மையான ஆலயங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருப்பேன். மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக்கூடாது என்று வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தது தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள். இவ்வாறிருக்க வன்முறைகளைத் தூண்டி மக்களின் அமைதியான வாழ்வை சீர் குலைக்கும் நடவடிக்கைகள் தற்காலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அனைத்து வன்முறையாளர்களையும், குழுக்களையும் யாழ் மண்ணிலிருந்து அடியோடு இல்லொதொழிக்கும் வகையில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொது மக்களின் ஸ்திரமான வாழ்வினை உறுதி செய்ய போராடுவேன். போதைப்பொருட்கள்; யாழ் குடா நாட்டுக்குள் கொண்டு வரப்படும் வழிவகைகளை கண்டறிந்து அதனைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகள், பெண்கள், சிறுவர் துஸ்பிரயோகங்களைத் தடுப்பதற்காகக் கிராமிய மட்ட ரீதியில் சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு பொருத்தமான ஆலோசனைகள் வழங்கப்படுவதனூடாக ஏற்பட இருக்கும் சமூக சீர்கேடுகளை தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பேன்.

06

அனைத்து தமிழ் உறவுகளையும் ஒரே புள்ளியில் இணைத்தல்

இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியான இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி தனிச் சிறப்பம்சங்களைக் கொண்ட தனித் தாரகையாகத் திகழ்கின்றது. கலைக்குப் புகழ் பெற்ற தமிழன், அதற்குப் புகழ் கொடுத்த மண் இந்த மண், உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழ் மக்களை இம் மண்ணுடன் ஒன்றிணைக்கும் விசேட திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்துவேன். குறிப்பாகப் புலம்பெயர் உறவுகளையூம், தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களையும் தாயகத்துடன் இணைக்கும் இணைப்புப்பாலத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கூடாக செயல் வடிவம் பெறச்செய்வேன். எம் மக்களுக்குப் பல வழிகளிலும் துணையாய் இருக்கின்ற உலகத் தமிழ் உறவுகள், புலம்பெயர் தமிழர்களின் மக்கள் நலன் சார் சமூக பொருளாதார ஆதரவுகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வர ஏதுவான நடைமுறைகளை மேற்கொள்வதனூடாக உதவித்திட்டங்களை பொருத்தமானவர்களுக்கு சென்றடைய வழிசமைப்பேன். எம் மண்ணிலிருந்து உயர்படிப்பு, தொழில் வாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் உறவுகளுக்கு மேற்படி இணைப்பினூடாக உதவிகள் கிடைக்க வழிவகைகளை உருவாக்குவேன். புலம்பெயர் தொழில்தருநர்களையும், ஆர்வமான இளையோர்களையும் இணைத்து தொழில் வாய்ப்புக்களை தமிழ் இளைஞர்களுக்கு எம் மண்ணிலே கிடைப்பதை உறுதி செய்வேன். வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களுக்காக ஒரு தளத்தினை உருவாக்கி அவர்களின் அறிவு, உலகளாவிய அனுபவங்களைப் பகிர வழிவகுப்பேன். பல்வேறுபட்ட மொழிகளைப் பேச்சு மொழியாகக் கொண்ட நாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் தாய் மொழிப் பற்றை உறுதி செய்யும் வகையில் இணையத்தினூடாக தமிழ்மொழிக் கற்கை நெறிகள் ஆரம்பிப்பேன். உலகத் தமிழர்கள் தமது பூர்வீக இடங்களைப் பற்றியும் எம் மண்ணின் கலாச்சாரச் சிறப்புப் பற்றியும் அறியக்கூடியவாறு விவரங்களைத் திரட்டி இணையத்தில் கிரமமான முறையில் பதிவேற்றுவேன். எம் மண் பெற்றெடுத்த சிறப்பை அழிப்பதோ சிதைப்பதோ என்பது நடவாத காரியம் என்பது எனது திடமான நம்பிக்கை.

உடல், உள நலன்மிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கல்

07

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற கூற்றிற்கமைய அதிகரித்து வரும் உடல் சார் நோய்களைக் கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் பொது உடற்பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள், அமைப்பதனூடாக உடற்பயிற்சியினை ஊக்குவிப்பேன். இலங்கையில் ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் யாழ், கிளிநொச்சி மாவட்டப் பெண்கள் உடற்பயிற்சி சார் செயற்பாடுகளில் ஈடுபடுவது குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே பெண்களுக்காக தனியான உடற்பயிற்சி நிலையங்களை அமைக்க வழிகோலுவேன். டெங்கு ஒழிப்புச் செயற்திட்டங்களைப் பன்முகப்படுத்தி யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் டெங்கு நோயை இல்லாதொழித்து இலங்கையில் முன்மாதிரியான மாவட்டங்களாகத் திகழ வழிகோலுவேன். கொரோனா போன்ற வைரசுகள் பரவலைத் தடுப்பதற்காக யாழ், கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவையினருடன் இணைந்து செயற்படுவேன். கோவிட் 19 தாக்கத்தின் பின்னர் தற்சார்பு பொருளாதாரம், கிராமிய பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. இதனை அடையும் பொருட்டு உரிய விழிப்புணர்வு, பயிற்சிகள், இலகு கடன் வசதிகள், உர மானிய சலுகைகள் ஆகியவற்றை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இயற்கை விவசாயச் செய்கையினை ஊக்குவிப்பதற்காக இயற்கை கிருமிநாசினிகள், சேதன பசளைகளை இலகுவாகவாகவும் மானிய அடிப்படையிலும் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். அரச மருத்துவமனைகள் அனைத்தும் போதிய நவீன வசதிகளுடன் செயற்படுவது உறுதிப்படுத்தப்படுவதுடன் மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகள் செவ்வனே சென்றடைவது உறுதி செய்யப்படும். வைத்தியர், தாதியர் பற்றாக்குறை காணப்படும் வைத்தியசாலைகளை இனங்கண்டு பொருத்தமான நியமனங்கள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதனூடாக சர்க்கரை வியாதி, குழந்தைப்பேறின்மை, புற்றுநோய் போன்ற முக்கிய மருத்துவத் தேவைகளுக்கான சிகிச்சை வசதிகளை யாழ் ,இகிளிநொச்சி மாவட்டங்களிலேயே பெற்றுக்கொள்ள வழிவகை செய்வேன். கேரள மாநிலத்தின் முன்மாதிரியைப் பின்பற்றி யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் தனித்துவமான சித்த ஆயூர்வேத வைத்தியத் துறையை விரிவாக்குவேன்.

08

தொழில்நுட்பத்தை மையப்படுத்திய சமூகமொன்றை கட்யெழுப்புதல்

தொழிநுட்பத்தினால் உலகமும், பல்வேறு நாடுகளும், சமூகங்களும் அடைந்த துரித வளர்ச்சியை நேரில் பார்த்தவன் நான். தொழில்நுட்பம் எமது சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய காத்திரமானதும் ஆக்கபூர்வமானதுமான பங்களிப்பை ஆழமாக புரிந்துகொண்டவன் என்ற ரீதியில், தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஒவ்வொரு தனிமனிதனினதும், சமூகத்தினதும் வினைத்திறனை அதிகரிக்க 'டிஜிட்டல்-யாழ்' என்ற திட்டத்தினூடாக பின்வரும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன். 'மின்னணு ஆளுக ஆட்சி' (digital governance) திட்டத்தினூடாக அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் இதர அலுவகங்களில் நடைபெறும் நாளாந்த அலுவல்கள், படிமுறைகள் மற்றும் செயற்பாடுகளை கணனிமயப்படுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து அதனை செயல்படுத்துவேன். அத்தியாவசிய தேவைகளான சுகாதாரம், போக்குவரத்துக்கு, கல்வி போன்ற துறைகளிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை இலகுவாக்க இலத்திரனியல்-சேவை (e-service) முறைகளை நடைமுறைப்படுத்துவேன். பணப்பரிமாற்றம், கொடுக்கல் வாங்கல்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும், இலகுபடுத்துவதற்கும் இலத்திரனியல்-கட்டணம் (e-payment) முறைமையை அறிமுகப்படுத்துவேன். இத்திட்டத்தினூடாக எமது மக்களினது பணநிர்வாகம், பணப்பரிமாற்றம் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்படும் என திடமாக நம்புகின்றேன். மேலும் எமது பொருளாதாரத்தை துரித வளர்ச்சி பாதையில் இட்டுசெல்லும் பொருட்டு உள்ளூர் தொழில்முனைவர்களை உருவாக்குவதற்கு 'startup-யாழ்' என்ற திட்டத்தையும், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள் தொடர்பான தரவுகளை ஆவணப்படுத்துவதற்கு இலத்திரனியல்-தரவுத்தளம் ஒன்றினை 'digital-database' என்ற திட்டத்தினூடாக செயற்படுத்துவேன்.

அறிவுபூர்வமான, சக்திமிக்க மகளிர், இளைஞர்களின் எதிர்காலம்

09

இன்றைய இளைஞர்களிடத்தில் காணப்படும் ஆக்கபூர்வமான விடயங்களோடு ஆற்றல் திறமைகளை இணைத்து எதிர் மறை எண்ணங்களை மறைத்து புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்வேன். வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கூடாக அவர்களின் திறனாற்றல் விருத்தியூடாக வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பேன். இதனால் அவர்கள் சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிப்படுத்தப்படுவதுடன் குறிப்பாக போதையற்ற, வன்முறையற்ற இளம் சமுதாயம் மீளுருவாக்கம் செய்யப்படும். கிராமிய ரீதியில் மாதர் சங்கங்களுடன் இணைந்து பெண்களுக்கான சிறப்புக் குழுக்களை உருவாக்குவேன். தற்காலத்தில் பெண்களுக்கு பெருஞ்சுமையாகக் காணப்படும் குடும்ப வன்முறைகள், தொழிலுக்கேற்ற ஊதியமின்மை, நுண்கடன் சார் பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காணும் வழிமுறைகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கி, அவற்றிக்கான தீர்வைப் பெறக் கூடிய நிறுவன இணைப்புக்களும் ஏற்படுத்திக் கொடுப்பேன். கிராமிய மட்ட ரீதியான விளையாட்டுக் கழகங்கள் வலுப்படுத்தப்படுவதுடன் சீரான கால இடைவெளிகளில் சந்திப்புகளை ஏற்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்வேன். விளையாட்டில் ஆர்வமான இளைஞர் யுவதிகளுக்காக அனைத்து வசதிகளுடனும் கூடிய சர்வதேச தர விளையாட்டு மைதானம், உள்ளக விளையாட்டு அரங்கினை அமைப்பதற்கு பரிந்துரைப்பேன். கிரிக்கட், உதைபந்தாட்ட, தடகளப்போட்டிகளில் திறமையான வீரர்களுக்கு விசேட பயிற்சிகளை ஏற்பாடு செய்து யாழ், கிளிநொச்சி மாவட்டங்களை விளையாட்டில் தேசிய ரீதியில் முதலிடத்திற்கு கொண்டு செல்ல பாடுபடுவேன். சிறந்த பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதனூடாக திறமையான வீர, வீராங்கனைகளை உலக அரங்கில் பிரகாசிக்க வைப்பதற்கான முயற்சிகளை ஆக்கப்பூர்வமாக முன்னெடுப்பேன். இளம் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப விவசாயச் செய்கை தொடர்பான செயற்திட்டத்தை அறிமுகப்படுத்துவதுடன் புதிய தொழில்நுட்ப கருவிகளை மானிய அடிப்படையில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்வேன். மேற்படி பொருத்தமான பொறிமுறைகள் மூலமாக கிராமங்களிலிருந்து நகரம் வரைக்கும் சாதிக்கத்துடிக்கும் இளையோர்களையும், மகளிர்களையும் இனங்கண்டு உலகுக்கு அறிமுகம் செய்வேன்.

10

இயற்கை, பௌதீக, ஆளணி வளங்களை மேம்படுத்தல்

மனித அடிப்படைத் தேவைகளில் முக்கியமானவையான நிரந்தர வதிவிடம், சொந்தக் காணி இல்லாதிருப்பவர்களை இனங்கண்டு வீட்டுத்திட்டம் பெற்றுக் கொடுக்கப்படும். “நீரின்றி அமையாது உலகு” என்ற வாக்கிற்கிணங்க ‘அனைவருக்கும் குடிநீர்’ என்ற செயற்திட்டத்தினை உருவாக்கி குடிநீர் அற்ற கிராமங்களுக்கு குழாய் மூலம் நீரிணைப்புகளும் உருவாக்கப்படும். மேலும் ‘இருள் அகன்றிய தேசம்’ எனும் தொனிப்பொருளில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார வசதிகளை ஏற்படுத்தி தெருவுக்குத் தெரு வீதி விளக்குகள் ஒளிர்வதும் உறுதி செய்யப்படும். அபிவிருத்தி இடைவெளியை நிரப்பி நிறைவான கிராமங்களை உருவாக்கும் நோக்கில் குன்றும் குழியுமாகக் காணப்படும் வீதிகள் புனரமைக்கப்பட்டு நீண்ட, அகலமான, மேம்பாடான வீதி விஸ்தீரணத்துடன், அனைவருக்கும் சமமான பொதுப் போக்குவரத்து வசதிகள் கிடைக்க வழி சமைப்பேன். இதனூடாக கிராமத்திலிருந்து நகரம் வரையான உறவுகளின் தொடர்புகள் பலப்படுத்தப்படும். சனசமூக நிலைய வாசிகசாலைகக்கும், முன்பள்ளிகளுக்கும் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பேன். கல்வியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக அனைத்துப் பாடசாலைகளுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான சமமான வளப்பகிர்வுகள் எதிர்வரும் 5 வருட காலத்திற்குள் செயற்படுத்துவேன். இயற்கை வளங்களின் பயன்பாட்டினை நிலைத்திருக்கக் கூடிய வகையில் மேற்பார்வை செய்தல், திட்டமிடல் பயன்பாடு, சூழல் பாதுகாப்பு முதலான இயற்கை வள முகாமைத்துவத்திற்காக மாவட்ட மட்ட குழுக்களை அமைப்பேன். அதே வேளை மீள்புதுப்பிக்கத்க்க சக்தி வளத்தை மேம்படுத்தி மின்சாரம், எரிசக்தி, நீர்வழங்கலை சுற்றுச்சூழலுக்கு இசைவாக பேண்தகு முறையில் கிடைக்க உறுதி செய்வேன். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் உள்ளுர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய சூழலியல் சுற்றுலாத்துறையினை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுப்பேன்.

“என் கனவு யாழ்" இல் இணைந்து, அடுத்த 10 ஆண்டுகளில் நம் நாட்டின் முதல் 5 மாவட்டங்களில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி இடம் பெறுவதை உறுதிப்படுத்த விரும்பும் ஒரு குழுவின் ஒரு பகுதியாக நீங்களும் இணையுங்கள்.!

இந்த பயணத்தில் பங்குதாரர் ஆகுங்கள்

12,885
பெயர்நகரம்நாடுவகிபாகம்
Shamraj LojithaTellippalaiSri LankaVolunteer
Uthayarasa AshokKaraveddySri LankaVolunteer
ThiresammaMaruthankernySri LankaVolunteer
Selvarasa arulthasNew YorkUnited StatesVolunteer
Thurairasa SivarasaChavakachcheriSri LankaVolunteer
T santiravatanyKandavalaiSri LankaVolunteer

“என் கனவு யாழ்" இல் இணைந்து, அடுத்த 10 ஆண்டுகளில் நம் நாட்டின் முதல் 5 மாவட்டங்களில் யாழ்ப்பாணம் இடம் பெறுவதை உறுதிப்படுத்த விரும்பும் ஒரு குழுவின் ஒரு பகுதியாக நீங்களும் இணையுங்கள்.!